உசிலம்பட்டி அருகே ம.தி.மு.க-நாம் தமிழர் கட்சியினர் மோதல்

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ம.தி.மு.க-நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வைகோவை சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி அருகே ம.தி.மு.க-நாம் தமிழர் கட்சியினர் மோதல்
Published on

உசிலம்பட்டி:

கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த 16 பேர் நினைவாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைந்துள்ளது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மதுரையில் இருந்து கம்பத்திற்கு நடைபயணம் செல்லும் வழியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பெருங்காமநல்லூர் வந்தார்.

அங்கு அஞ்சலி செலுத்தியபின் அவர் பேசியபோது, முகநூல், வாட்ஸ்-அப்பில், தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் ரவியின் இறப்பை கொச்சைப்படுத்தி வெளியிட்டு வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வேதனை தருகிறது. இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்றார்.

மேலும், “என்னை சிலர் தெலுங்கர் என குறிப்பிட்டு பேசி வருகின்றனர். வீண் வதந்திகளை பரப்புகின்றனர். அப்பாவி இளைஞர்களுக்கு தவறான தகவல்களை தந்து எனக்கு எதிராக தூண்டி விடுகின்றனர். இதை வெளியே நிற்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றும் ஆவேசமாக பேசினார்.

அப்போது வெளியே தியாகிகள் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சியினர் நின்று கொண்டிருந்தனர்.

வைகோ பேச்சைக் கேட்ட அவர்கள், தங்களை குறிப்பிட்டு வைகோ பேசுகிறார் என கருதி எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் பேசி முடித்துவிட்டு வைகோ அங்கிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வெளியே வந்தார்.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோவை சூழ்ந்து கொண்டு தகராறு செய்தனர். வைகோவும் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ம.தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உருவானது. சிலர் வைகோவை தாக்கவும் முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசாரும், ம.தி.மு.க. தொண்டர்களும் வைகோவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com