

வேலூர்:
வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் நியாமட் (வயது 30). இவர், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு மெத்தை மற்றும் ஷோபா தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இதற்காக பஞ்சு மூட்டை குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
தயாரிக்கப்பட்ட மெத்தை, ஷோபாக்காளும் வெளி மார்க்கெட்டில் விற்பதற்காக குடோனில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேக்கிங் உள்ளிட்ட வேலைபாடுகளுக்காக வேலூரில் இருந்து நேற்று புதியதாக பாய்லரை வாங்கி கொண்டு வந்து குடோனில் வைத்திருந்தனர்.
இன்று காலையில், பாய்லர் திடீரென வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தொழிலாளர்கள் பணியில் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் மெத்தை, ஷோபா, பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குடோனில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து, வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.