

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கி வரும் தீவிரவாதிகள் தற்போது நிதி தேவைக்காக வங்கிகளை குறிவைக்கத் தொடங்கி உள்ளனர்.
குல்காம் மாவட்டத்தில் நேற்று 4 போலீசார் மற்றும் இரு வங்கி அதிகாரிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், வங்கிப் பணத்துடன் கூடிய வேனை கடத்திச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மேலும் ஒரு வங்கியில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
குல்காம் மாவட்டம் கேதர் கிராமத்தில் உள்ள ஒரு வங்கியினுள், முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த நபர்கள், 65 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தி, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.