திருமண தகராறில் கத்திரிகோலால் குத்தி வாலிபர் கொலை- வடமாநில தொழிலாளி கைது

மாங்காடு அருகே திருமண தகராறில் வாலிபரை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கைதான சுனில்கொண்டா, கொலையுண்ட அஜய்குமார்.
கைதான சுனில்கொண்டா, கொலையுண்ட அஜய்குமார்.
Published on

பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (வயது 19) என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த சுனில் கொண்டா உள்பட 5-க்கும் மேற்பட்டோர் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு அஜய்குமாருக்கும், சுனில் கொண்டாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுனில் கொண்டா மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சுனில்கொண்டா அருகில் இருந்த கத்திரிகோலை அஜய்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடன் தங்கி இருந்த தொழிலாளர்கள் அஜய்குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்கொண்டாவை கைது செய்தனர். திருமணத் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

கொலையுண்ட அஜய்குமாரின் அக்காளை சுனில்கொண்டாவுக்கு பேசி முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அஜய்குமார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் அக்காளை சுனில் கொண்டாவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த சுனில் கொண்டா தொடர்ந்து அஜய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இந்த மோதல் கொலையில் முடிந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சுனில் கொண்டாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com