அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவாவுடன் மோதுகிறார், ஹாலெப்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் ஷரபோவாவுடன் கோதாவில் இறங்குகிறார்.
சிமோனா ஹாலெப் - மரிய ஷரபோவா
சிமோனா ஹாலெப் - மரிய ஷரபோவா
Published on

நியூயார்க்:

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) முடிவு செய்யப்பட்டது. இதன்படி 20-வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்திருக்கும் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் பிரான்சஸ் டியாபோவுடன் (அமெரிக்கா) மோதுகிறார்.

2010, 2013-ம் ஆண்டு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சவாலை டுசான் லாஜோவிச்சுடன் (செர்பியா) தொடங்குகிறார். இதே போல் 2-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரினை எதிர்கொள்கிறார். நடாலும், பெடரரும் அரை இறுதியில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) இருவரும் காயத்தால் இந்த முறை அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் சுற்றில் மக்டா லினெட்டியுடனும் (போலந்து), விம்பிள்டன் சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), லெப்சென்கோவுடனும் (அமெரிக்கா), நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) நவோமி ஒசாகாவுடனும் (ஜப்பான்) மோதுகிறார்கள்.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), முதல் சுற்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ புயல் ரஷியாவின் மரிய ஷரபோவாவுடன் மல்லுகட்ட வேண்டி இருக்கிறது. ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாத காலம் தடையை அனுபவித்த ஷரபோவா, ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் இந்த போட்டியில் கால் பதிக்கிறார்.

பெண்கள் பிரிவில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க 8 வீராங்கனைகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அதில் ஹாலெப்பும் ஒருவர். ஆனால் ஹாலெப்புக்கு முதல் தடையை கடப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷரபோவாவுக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் ஹாலெப் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com