மரக்காணத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பியூலா
பியூலா
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் தெருவை சேர்ந்தவர் விமல துரைநாதன் (வயது 40). இவரது மனைவி பியூலா (36) இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். மேலும் கணவன்- மனைவி 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏல சீட்டு உள்பட பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தனர்.

இவர்களிடம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் ஆகிய சீட்டுகளில் சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் முதலில் சீட்டு முடிந்து சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்த இவர்கள் பின்னர் சரியாக சீட்டு பணம் கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விமலதுரை நாதனும் அவரது மனைவி பியூலாவும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம்வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விமலதுரை நாதன், பியூலா ஆகிய இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் மரக்காணத்தில் இருந்து பியூலா வெளியூருக்கு தப்பி செல்ல போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பியூலாவை கைது செய்தனர்.

பின்னர் பியூலாவை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விமலதுரை நாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com