மானூர் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் மாயம்

மானூர் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் மாயம்
மாணவர்கள் மாயம்
Published on

நெல்லை:

மானூர் அருகேயுள்ள மொட்டையனூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் பெனியல் (வயது15). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மகன் பிரவீன் (15). நண்பர்களான இருவரும் ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள், இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் பீஸ் கட்ட வேண்டியுள்ளது எனகூறி பெனியல் தனது தந்தையிடம் ரூ. 3 ஆயிரமும், பிரவீன் தனது தந்தையிடம் ரூ. 500 யும் வாங்கி கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் மாணவர்கள் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று மானூர் போலீசில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் ரெட்டியார்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவர்கள் பெனியல் மற்றும் பிரவீன் உடன் படித்தவர்கள் அவர்கள் இருவரும் ரெட்டியார்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறி சென்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மாயமான மாணவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள்? என்று விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com