இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேவுக்கு நேபாள கவுரவ தளபதி பட்டம் - ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கினார்

இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேவுக்கு நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி பட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி காத்மாண்டுவில் நேற்று வழங்கினார்.
இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேவுக்கு கவுரவ தளபதி பட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கிய காட்சி
இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேவுக்கு கவுரவ தளபதி பட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கிய காட்சி
Published on

காத்மாண்டு:

நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் முயற்சிக்கு அணைபோடும் விதமாகவும், இந்தியா-நேபாளம் இடையிலான விரிசலை சரிசெய்யும் முயற்சியாகவும், இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே நேபாள நாட்டுக்கு 3 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தலைநகர் காத்மாண்டுவில் ஜனாதிபதி மாளிகையான ‘ஷீத்தல் நிவாசில்’ நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி பட்டத்தை நரவனேவுக்கு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கினார். அத்துடன் ஒரு வாளும், பட்டச்சுருளும் அவருக்கு அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் எம். குவாத்ரா மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுக்கு பின் வித்யாதேவி பண்டாரியுடன் பேசிய நரவனே, கவுரவ பட்டம் வழங்கியதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இரு தரப்பு கூட்டுறவை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது இந்திய தூதர் குவாத்ரா உடன் இருந்தார்.

முன்னதாக நரவனே, நேபாள ராணுவ தலைமை தளபதி பூர்ணசந்திர தாப்பாவை சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான நட்பு, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ராணுவ தலைமையகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட நரவனே, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கான நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தனது பயணத்தின் நிறைவுநாளில், நேபாள பாதுகாப்புத் துறையை கவனிக்கும் பிரதமர் சர்மா ஒலியை நரவனே சந்தித்து பேசுவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com