அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்பட்டது

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. #ManoharParrikar #ManoharParrikarcremated #RIPManoharParrikar
அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்பட்டது
Published on

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக 4 முறை பதவி வகித்தவருமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவாவின் பான்ஜிம் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பாரிக்கரின் உடல் இன்று காலை கொண்டு செல்லப்பட்டு அங்கு 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும். பாரிக்கர் மறைவுக்கு இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படும். கோவா அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அஞ்சலி செலுத்தியபோது துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தி, தேற்றினர்.

இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை சுமார் 5 மணியளவில் மனோகர் பாரிக்கரின் உடல் தேசியக்கொடியால் மூடப்பட்டு, ராணுவ வாகனத்தில் ஏற்றி பனாஜி நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மிராமர் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கோவா முன்னாள் முதல் மந்திரி தயானந்த் பன்டோக்கர் நினைவிடத்தின் அருகே வைக்கப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com