மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரிசோதனை

மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் வீடு மற்றும் அதே பகுதியில் திவாகரன் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரிசோதனை
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன், மற்றும் சசிகலாவின் தம்பி திவாகரன் ஆகியோர் வீடுகள் உள்பட 20 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மன்னார்குடியில் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து 14 குழுக்களை சேர்ந்த 80 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். இந்த குழுவினர் மன்னார் குடியில் 16 இடங்கள், நீடாமங்கலத்தில் 3 இடங்கள், திருத்துறைப்பூண்டியில் ஒரு இடம் என 20 இடங்களில் சோதனை நடந்தது.

இதில் மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் வீடு, சுந்தர கோட்டையில் உள்ள திவாகரன் வீடு, மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு, திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத் தாயார் கல்லூரி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி, முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளை, திவாகரனின் உறவினர் அக்ரி ராஜேந்திரன், திருப்பாலக்குடியில் விநாயகம் வீடு, திருத்துறைப்பூண்டியில் அக்ரி நடேசன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்ததது.

மன்னார்குடி பகுதியில் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்தது.

இந்த நிலையில் மன்னார்குடி பகுதியில் இன்று 2-வது நாளாக 5 இடங்களில் சோதனை தொடங்கியது.

இன்று காலை 7 மணி முதல் மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் வீடு மற்றும் அதே பகுதியில் திவாகரன் வீடு, மன்னார்குடி சுந்தர கோட்டையில் உள்ள திவாகரன் வீடு, மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு, மற்றும் திருப்பாலங்குடியில் உள்ள விநாயகம் வீடு, வடூவூரில் உள்ள அக்ரி ராஜேந்திரன் வீடு ஆகிய 5 இடங்களில் சோதனை தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக கார்களில் சென்று சோதனை நடத்தினர்.

தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் மன்னார்குடி பகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பகுதியில் சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் தினகரன் அணியினருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று நடந்தது.

தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீடு, மற்றும் மறைந்த மகாதேவன் வீடு, அவரது தம்பி தங்கமணி வீடு, தஞ்சை மேலவஸ்தா சாவடியில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீடு, வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு, மற்றும் பிலோமினாள் நகரில் உள்ள முன்னாள் கவுன்சிலர் ராஜேசுவரன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடந்தது. காலை தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடந்தது.

இன்று 2-வது நாளாக தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள மறைந்த மகாதேவனின் மற்றொரு வீட்டிலும், பிலோமினாள் நகரில் உள்ள முன்னாள் கவுன்சிலர் ராஜேசுவரன் வீட்டிலும் சோதனை தொடங்கியது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதில் ராஜேசுவரன் வீட்டில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தினகரன் அணியை சேர்ந்த இவர் இளைஞர் பாசறையில் மாநில துணை செயலாளராக இருந்து வருகிறார்.

மன்னார்குடி- தஞ்சையில் நேற்று நடந்த சோதனையின் போது பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள எதுவும் கைப்பட்டதா? என்று கேட்டதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை.

அதேநேரத்தில் சோதனை 2-வது நாளாகவும் தொடர்வதால் முடிவில் தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com