

சென்னை:
தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் காலணி விற்பனை கடையில் மாஞ்சா நூலை மறைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கடையில் இருந்து 400க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாஞ்சா நூலை மறைத்து விற்பனை செய்தது தொடர்பாக காலணி உரிமையாளர் தமின் அன்சாரி, ஷாஜகான் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.