மணிவண்ணன் வாக்குமூலம் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்குகிறார்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
மணிவண்ணன்
மணிவண்ணன்
Published on

கோவை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கூடுதலாக மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து கைது செய்தனர். இது தொடர்பான அறிக்கையை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்

பாலியல் வழக்கு தொடர்பாக மணிவண்ணனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் மணிவண்ணனிடம் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வழக்கில் வேறு யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் திருநாவுக்கரசு ஆந்திராவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தார். இதேபோல மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவரும் தலைமறைவானார்.

இவர்கள் தலைமறைவான காலகட்டத்தில் சமூக வலை தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. எனவே வீடியோக்கள் வெளியான சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மணிவண்ணன் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

அதன்பிறகு இவ்வழக்கில் அவரது நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

மணிவண்ணன் மீது அடிதடி வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவரது செல்போன் தொடர்பு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் விசாரணை நடத்தியதில் இவருக்கும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதையடுத்து பாலியல் வழக்கிலும் மணிவண்ணனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PollachiCase #CBCID

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com