திரிபுரா முதல் மந்திரி மாணிக் சர்க்கார் ராஜினாமா

திரிபுரா மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்துவந்த மாணிக் சர்க்கார், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். #tirupura #maniksarkar
திரிபுரா முதல் மந்திரி மாணிக் சர்க்கார் ராஜினாமா
Published on

அகர்தலா:

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

நேற்று இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கையில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டது.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அவர் தான் போட்டியிட்ட தான்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிரதிமா பவுமிக்கை விட 3,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதலில் முன்னிலையில் இருந்த மாணிக் சர்க்காரின் கட்சி அதன்பின் கடும் சரிவை சந்தித்தது. இறுதியில், பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களிலும், மா. கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் வென்றது.

இந்நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, முதல் மந்திரி மாணிக் சர்க்கார், தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில கவர்னரை சந்தித்து இன்று முறைப்படி கடிதம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், கவர்னர் ததகதா ராயை நேரில் சந்தித்த முதல் மந்திரி மாணிக் சர்க்கார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது, அடுத்த முதல் மந்திரியை நியமிக்கும் வரை முதல் மந்திரி பொறுப்பை தொடர வேண்டும் என அவரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர். #tirupura #maniksarkar #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com