

புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.
இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய மெழுகுவர்த்தி பேரணி இச்சம்பவங்களின் பக்கம் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
2012-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டு POCSO எனப்படும் சிறார்-சிறுமியர் பாலியல் வன்கொடுமை தடை சட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் காமுகர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க இயலும்.
இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் காமுகர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய மந்திரி மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், கத்துவா மற்றும் சமீபகாலமாக நடைபெற்ற அனைத்து கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக மிகவும் ஆழ்ந்த கவலையும், வேதனையும் அடைந்துள்ளேன்.
எனவே, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் காமுகர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக POCSO எனப்படும் சிறார்-சிறுமியர் பாலியல் வன்கொடுமை தடை சட்டத்தில் திருத்தம் செய்ய நானும் எனது அமைச்சக உயரதிகாரிகளும் பரிசீலித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். #Maneka #POCSO