

திருச்சி:
திருச்சி அருகே மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித். 30 ஆடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்புப் படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவி மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வந்துள்ளனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள் தயாராக உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.