ஆரோக்கியா பாலில் கலப்படம் இல்லை: மேலாண்மை இயக்குனர் விளக்கம்

ஆரோக்கியா பாலில் கலப்படம் இல்லை என்று அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஜி.சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆரோக்கியா பாலில் கலப்படம் இல்லை: மேலாண்மை இயக்குனர் விளக்கம்
Published on

சென்னை:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘தமிழக அரசின் ஆவின் பால் தரமானது. தனியார் பால் நிறுவனத்தினர் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயன வேதிப்பொருட்கள் சேர்க்கிறார்கள் என்று நேற்று முன்தினம் குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் ஆரோக்கியா பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘ஹட்சன் அக்ரோ’ நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ஆர்.ஜி. சந்திரமோகன், நிர்வாக இயக்குனர் சி.சத்யன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஆரோக்கியா பால் நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்கிறது. இதில் எந்தவொரு இடைத்தரகர்களையும் அனுமதிப்பது இல்லை.

ஆரோக்கியா பால் தரமானது என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் சான்று வழங்கி இருக்கிறது. பாலில் ஊட்டச்சத்து, கொழுப்புச்சத்து உள்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக எந்தவித ரசாயன பொருட்களும் கலப்படம் செய்யப்படுவது இல்லை. வெப்பம் மூலமே பால் பதப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கு அடுத்தபடியாக 32 சதவீதம் ஆரோக்கியா பால் விற்பனை நடக்கிறது. கனடா, சிங்கப்பூர் உள்பட 40 வெளிநாடுகளுக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா அளவில் முன்னணி பால் நிறுவனமாகவும் திகழ்கிறோம்.

ஆரோக்கியா பால் ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டும் என்றாலும் நேரில் பார்வையிடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com