

கொச்சி:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பட்டிமட்டத்தை சேர்ந்தவர் சாஜி (வயது31). ஓட்டல் ஊழியரான இவருக்கு பிந்து(29) என்ற மனைவியும், 1½ வயதில் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கலமாச்சேரியில் வசித்து வந்தார். இவர்களுடன் பிந்துவின் தாய் ஆனந்த வள்ளியும் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாஜி, தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு அறையில் தூங்கச்சென்றார். ஆனந்தவள்ளி வேறு ஒரு அறையில் தூங்கினார்.
நேற்று அதிகாலை ஆனந்தவள்ளி தனது மகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்தார். அதன்பிறகு அவர் பிந்து தூங்கிய அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பிந்து மற்றும் ஸ்ரீஹரி ஆகியோர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் சாஜி அங்கிருந்த குளியல் அறையில் பிணமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின்பு அங்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்ததில், குடும்ப தகராறு காரணமாக சாஜி, தனது மனைவி மற்றும் மகனை தீவைத்து எரித்து கொன்றுவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.