

புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் பரிசாந்த் சவுகான் (வயது 23). இவர் டெல்லியின் ஷதாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது சரிதா விகாரில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவரது மாமா மகன் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் பேசிக்கொண்டிருந்த சவுகான், செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று தனது தந்தையின் துப்பாக்கியை நைசாக எடுத்து வந்து செல்பி போஸ் கொடுத்துள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கை துப்பாக்கி விசையில் பட, தோட்டா சீறிப் பாய்ந்து சவுகானை தாக்கியது. இதில் நிலைகுலைந்து விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
சிறுவன் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் அவனது தந்தை பிரமோத் சவுகான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இல்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews