

லதேகர்:
ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சரண் முண்டா (வயது 65). இவர் தன் மனைவி மற்றும் மகளுடன் அவரது கிராமத்தில் வசித்து வந்தார்.
தினக்கூலி வேலை பார்க்கும் ராம்சரண், ரேசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களையே பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், நெட்வொர்க் பிரச்சனை காரணமாக ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்யவில்லையாம். இதனால் இவருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர்.
இந்நிலையில், ராம்சரண் முண்டா நேற்று உயிரிழந்தார். ரேசன் பொருட்கள் கிடைக்காததால் அவர் பட்டினியால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
3 மாத காலமாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், கடந்த 4 நாட்களாக அவர் உணவு எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார் என்றும் அவரது மகள் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த கிராமத்திற்கும் 3 மாதமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், ராம்சரண் வீட்டில் 3 நாட்களாக உணவு எதுவும் சமைக்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், ரேசனில் பொருட்கள் கிடைக்காததுதான் ராம்சரண் முண்டாவின் மரணத்திற்கு காரணம் என்பதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் ராம்சரண் இறந்திருக்கலாம் என்றும், 2 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
‘பட்டினியால்தான் ராம்சரண் உயிரிழந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா, ரேசன் கார்டு, பென்சன் உள்ளிட்ட அரசு பயன்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கு இன்டர்நெட் இணைப்பு இல்லை. எனவே, ஆப்லைன் மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி உள்ளோம்’ என துணைக்கோட்ட அதிகாரி கூறியுள்ளார்.