போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் உத்தரவு

போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

சேலம் மாவட்டத்தில் போலீஸ் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், நேற்று (22-6-2021) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏதாப்பூர் காவல்துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.

அப்போது, காவல் துறையினருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர், தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் மயக்கமடைந்து, சாலையில் விழுந்த நிலையில், அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இன்று (23-6-2021) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர், முருகேசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். 

இத்துயர செய்தியை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், அவரது குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com