

ஜோகன்னஸ்பர்க்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜுலன் கோஸ்வாமி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கிம்பர்லீ மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 303 ரன்கள் என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தென்ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய லாரா வால்வார்ட், இந்திய பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகளில் ஜூலன் கோஸ்வாமி முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்நிலையில் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஜுலான் கோஸ்வாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில்,
பாராட்டுக்கள் ஜுலான் கோஸ்வாமி. இந்திய அணிக்கும், மேற்கு வங்காளம் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார். #JhulanGoswami #Firsttoclaim200Wickets #WODICricket