

மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை, போளூவாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அடர்ந்த வன பகுதியில ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.
அவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது. ஊருக்குள் புகும் யானைகள் இங்குள்ள பயிர்களை தின்று நாசம் செய்கிறது. சில சமயங்களில் மனிதர்களை தாக்கி உயிரிழப்பு சம்பவமும் நடைபெற்று வருகிறது.
யானைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை சார்பில் அகழிகள் வெட்டப்பட்டு உள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை வன பகுதியில் ஆண் யானை அகழிக்குள் விழுந்து இறந்து கிடந்தது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
மாவட்ட வன அலுவலர் சதிஷ், அரசு கால்நடை மருத்துவர் டாக்டர். மனோகரன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் அங்கு விரைந்து உள்ளனர். இந்த அகழி அருகே தனியார் தோட்டத்தில் மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே மின்சாரம் தாக்கி யானை அகழியில் விழுந்ததா? அல்லது தவறி விழுந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.