இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய பிரதமருடன் சந்திப்பு

வன்முறை, கருப்புப் பணம் பரிமாற்ற வழக்குகளில் இந்திய அரசால் தேடப்படும் மத போதகர் ஜாகிர் நாயக் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மதுவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #ZakirNaikextradition #MalaysianPMmeetsZakirNaik
இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய பிரதமருடன் சந்திப்பு
Published on

கோலாலம்பூர்:

வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.

அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது. சில சொத்துகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தற்போது மலேசியா நாட்டில் தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். சவந்த் மற்றும் ரேவதி மோகிதே அமர்வு, ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

மேலும், தனது பாஸ்போர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய வழக்கு என்றும், ஜாகிர் நாயக் நீதிமன்றத்திலோ, விசாரணை ஆணையத்திடமோ ஆஜர் ஆகாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது எனவும் கூறினர்.

மேலும், ஜாகிர் நாயக் மீது விதிக்கப்பட்ட எவ்வித தடையையும் நீக்க முடியாது என்றும் பாஸ்போர்ட் பெற வேண்டும் எனில் அதற்கு தனியாக மனு அளிக்க வேண்டும் எனவும், ஜாகிர் நாயக் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் கடந்த மாதம் அறிவுறுத்தி இருந்தனர்.

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ஜாகிர் நாயக் சமீபத்தில் மறுத்திருந்தார்.

நான் இந்தியா வருவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. தவறானவையும் கூட. எனக்கெதிராக நியாயமற்ற விசாரணை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வரை இந்தியாவுக்கு வருவதாக திட்டமில்லை.

நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும்போதுதான் என் தாய்நாட்டுக்கு வருவேன் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது  திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அருகேயுள்ள புட்ரஜெயா நகரில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  நேற்று (சனிக்கிழமை) காலை ஜாகிர் நாயக் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மதுவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மலேசியாவின் பிரபல பத்திரிகையான ‘பிரீ மலேசியா’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர்கள் என்ன பேசிக் கொண்டனர்? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பிடுகின்றது.  #ZakirNaikextradition #MalaysianPMmeetsZakirNaik

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com