

மலேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 14-வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக்(65) மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.
இந்நிலையில், இந்த மாபெரும் ஊழல் தொடர்பாக நஜிப் ரசாக் மீது 7 முக்கிய குற்றச்சாட்டுகளுடன் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நஜிப் ரசாக் இன்று முதல்முறையாக ஆஜரானார்.
நாட்டின் கணக்கில் சேர வேண்டிய பணத்தை தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் நஜிப் ரசாக் எப்படி மாற்றினார்? என்பது தொடர்பாக அரசு உயரதிகாரி ஒருவர் உரிய ஆவணங்களுடன் இன்று சாட்சியம் அளித்தார். அவர் முன்வைத்த தகவல்களை நஜிப் ரசாக் தொடர்ந்து மறுத்தார்.