239 பேருடன் மாயமான விமானம்: மீண்டும் தேடுதல் வேட்டைக்கு மலேசிய அரசு அனுமதி

மூன்றாண்டுகளுக்கு முன்னர் 239 பேருடன் மாயமான விமானத்தை மீண்டும் தேடும் அமெரிக்க நிறுவனத்தின் பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி இன்று அனுமதி அளித்துள்ளார்.
239 பேருடன் மாயமான விமானம்: மீண்டும் தேடுதல் வேட்டைக்கு மலேசிய அரசு அனுமதி
Published on

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது

இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. 

ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை இத்துடன் நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன. 

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இருந்து கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் இன்று அனுமதி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com