இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள படப்பிடிப்பு குழுவினர் சிக்கியுள்ளனர்.
நடிகை மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர்
Published on

சிம்லா:

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீரென ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. 

இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவினால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சத்ரா பகுதியில் கயாட்டம் என்ற மலையாள படத்தின் ஷூட்டிங் குழு சிக்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். 

இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கும் இந்த படத்தின் காட்சிகள் இமாச்சலப் பிரதேசத்தில் படமாக்கப்பட்ட போது மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நடிகை மஞ்சு வாரியர், சணல் குமார் சசிதரன் உள்பட மொத்தம் 30 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மஞ்சுவாரியர் சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறியதை தொடர்ந்து, அவரது சகோதரர் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அனுப்பி, சத்ரா பகுதியில் நிலச்சரிவில் சிக்கியுள்ள படக் குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com