

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூ கி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர்.
வங்கதேசத்தில் சுமார் 4 லட்சம் ரோஹிங்யா அகதிகள் வசித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுவும் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் வங்கதேசத்திற்குள் தப்பி வந்ததாக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் லண்டனில் வாழும் சமூக ஆர்வலரான மலாலா யூசுப்சாய், மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகியிடம், ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பாக உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.