

திருவனந்தபுரம்:
மனுதாரர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், ஐகோர்ட்டு தீர்ப்பு, மாநில மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை தெரிவித்தார்.
கேரள ஐகோர்ட்டின் வைர விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி, நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
ஐகோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அளிக்கப்படுகின்றன. நமது நாடு, பல்வேறு மொழிகள் பேசப்படும் நாடு. மனுதாரர், ஆங்கிலம் தெரியாதவராக இருக்கலாம்.
அதனால், தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அவருக்கு தெரியாமல் போய்விடக்கூடும். அந்த சூழ்நிலையில், அவர் தீர்ப்பை மொழி பெயர்த்து சொல்வதற்கு வக்கீலையோ அல்லது வேறு நபரையோ சார்ந்திருக்க வேண்டி உள்ளது. இது, கால விரயத்தையும், பண விரயத்தையும் ஏற்படுத்தும்.
ஆகவே, ஐகோர்ட்டு தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்த்து மனுதாரர்களிடம் அளிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். தீர்ப்பு அளிக்கப்பட்ட 24 மணி அல்லது 36 மணி நேரத்துக்குள், சான்றளிக்கப்பட்ட மொழி பெயர்ப்பு நகல், அவரிடம் அளிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், மக்களிடம் நீதியை எடுத்துச் செல்வது மட்டும் முக்கியம் அல்ல, அவர்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களுக்கு புரியும் வகையில் அளிப்பதும் முக் கியம்.
வழக்குகள் தாமதம் ஆவதும் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. இதனால், ஏழைகளும், நலிந்த பிரிவினரும்தான் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். அவசியமான சூழ்நிலையில் மட்டுமே வாய்தா அளிக்கும் வகையில் ஒரு நடைமுறையை கொண்டுவருவது பற்றி பரிசீலிக்க வேண்டும். வழக்கை இழுத்தடிப்பதற்கான தந்திரமாக வாய்தாவை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மாநில கவர்னர் சதாசிவம், மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.