மயிலம் அருகே விபத்து- 2 பெண்கள் பலி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சேதமடைந்த கார்.
விபத்தில் சேதமடைந்த கார்.
Published on

மயிலம்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் அருள் முருகன் (வயது 52). அவரது மனைவி பத்மாவதி (45). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பரிசோதனைக்காக ஒரு காரில் அருள்முருகன், பத்மாவதி ஆகியோர் சென்னை புறப்பட்டனர். காரை டிரைவர் கிரிவரதன் (30) என்பவர் ஓட்டினார். அவர்களுடன் கிரிவரதனின் தாய் பத்மாவதி (53) என்பவரும் உடன் சென்றார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த கார் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக்கொண்டு மினிலாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பியது. அப்போது முன்னால் சென்ற மினி லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அருள்முருகனின் மனைவி பத்மாவதி, மற்றும் கிரிவரதனின் தாயார் பத்மாவதி ஆகியோர் இறந்து விட்டதாக கூறினர்.

காயம் அடைந்த அருள்முருகன், கிரிவரதன் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனத்தை டோல்கேட் ஊழியர்கள் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com