

புதுடெல்லி:
மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
புதிய எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடலின் பெயர் வெளியிடப்படாமல் இருக்கிறது. ஏழு பேர் அமரக்கூடிய ஆடம்பர் எஸ்யுவி இந்தியாவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. அந்த வகையில் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹேந்திரா புதிய காரின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், இந்த கார் எக்ஸ்யுவி700 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்யுவி500 பிரபலமாக இருப்பதால் புதிய மாடலின் பெயர் எக்ஸ்யுவி700 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எக்ஸ்யுவி700 ரெக்ஸ்டன் ஜி4 மாடலின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகவும், சில அம்சங்கள் இந்தியாவுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. முந்தைய ரெக்ஸ்டன் மாடல் சங்யோங் பிரான்டு பெயரில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இது இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இதனால் புதிய காரினை எக்ஸ்யுவி பிரான்டிங் செய்ய மஹேந்திரா முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய எக்ஸ்யுவி700 இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எக்ஸ்யுவி700 மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 178 பிஹெச்பி பவர், 420என்எம் டார்கியூ மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரில் 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.