

மும்பை:
மராட்டிய மாநிலத்தில் கேபினட் மந்திரியாக இருப்பவர் கிரிஷ் மகாஜன். இவர், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, மது தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் மதுவுக்கு ஆண்கள் பெயரை சூட்டுகிறார்கள். இது தவறானது. உலகம் முழுவதும் மதுவுக்கு பெண்கள் பெயரைதான் சூட்டுகிறார்கள். அவை நன்றாக விற்பனை ஆகிறது.
எனவே, யாராவது இங்கு தங்கள் மதுவுக்கு மகாராஜா என்று பெயர் சூட்டி இருந்தால் அதை மகாராணி என்று மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது விற்பனை எகிறுவதையும், விற்பனை வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம்.
அதே போல் சிகரெட்டு கம்பெனிக்காரர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். அவர்கள் கமல், விமல் என பெயர் சூட்டுகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறு பெண்களை மையமாக வைத்து தவறாக சித்தரித்து பேசியதால் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் மந்திரி கிரிஜன் மகாஜனை கண்டித்து தலையங்கம் எழுதப்பட்டு இருந்தது. அதில், அரசாங்கம் ஒரு பக்கம் மது குடிப்பதையும், அதை தயாரிப்பதையும் எதிர்த்து பிரசாரம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் மந்திரியே மதுவின் விற்பனையை அதிகரிப்பதற்கு பெண்கள் பெயரை பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது, பெண்களை அவமதிக்கும் செயல் என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரீத்தி சர்மா கூறும் போது, பெண்களை மந்திரி தரம் தாழ்ந்து மதிக்கிறார். இதனால்தான் அவரிடம் இருந்து இந்த கருத்து வந்திருக்கிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் மந்திரி கிரிஷ் மகாஜன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் கூறிய கருத்து சம்பந்தமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.