மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
Published on

தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆற்றங்கரைகளில் கூடி பூஜை செய்து வழிபட்டு திதி கொடுப்பது வழக்கம்.

இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து, ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மிகவும் நல்லது என்று ஐதீகத்தில் கூறப்பட்டுள்ளது.

இன்று (புரட்டாசி 11ந்தேதி) மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருச்சியில் காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே குவிய தொடங்கினர்.

படித்துறை அருகில் நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்பு பொது மக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு பூஜை செய்து திதி கொடுத்தனர். பூஜை செய்த பொருட்களை அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் தண்ணீரில் கரைத்தனர்.

இந்தாண்டு மகாளய அமாவாசைக்கு திதி கொடுக்க அதிக அளவில் மக்கள் குவிந்தனர். இதனால் அம்மாமண்டபம், மாம்பழசாலை, ஸ்ரீரங்கம் காவிரி பாலம் பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அம்மா மண்டபம் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

அம்மாமண்டபம் படித் துறையில் புரோகிதர்கள் அமரவும், மக்கள் அமரவும் இடவசதி குறைவாக இருந்ததால் நெருக்கி அடித்து கொண்டு பூஜை செய்து சென்றனர். அப்பகுதியில் நடப்பதற்கும் சிரமமாக இருந்தது.

வேத மந்திரங்களை சொல்லும் போதும் அரு கருகே அமர்ந்து இருந்ததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு இட வசதி பிரச்சினையை போக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆடி பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை போன்ற மற்ற அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும். இதனால் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குள் வைத்து புரோகிதர்கள் மூலம் பூஜை செய்து திதி கொடுப்பார்கள்.

தற்போது மகாளய அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது. அதனால் திருச்சி அம்மா மண்டபம், படித்துறை படிகளை தொட்டு கொண்டு காவிரி ஆறு வெள்ளம் கரை புரண்டு செல்கிறது.

இதனால் திதி கொடுப்பவர்கள் அனைவரும் படித்துறை மேல் பகுதியிலேயே அமர்ந்து திதி கொடுக்கிறார்கள். அதோடு அங்கேயே குளிப்பவர்கள், உடை மாற்றுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் என மக்கள் கூட்டம் திரள்வதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.

இது குறித்து போலீசார் கூறும் போது, மக்கள் அனைவரும் அம்மா மண்டபம் படித்துறையில் தான் திதி கொடுக்க குவி கிறார்கள். இதனால் ஒரே இடத்தில் கூட்டம் அதிகம் ஏற்படுகிறது,நெருக்கடி போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க திருச்சி காவிரி ஆற்றில் உள்ள அய்யாளம்மன் படித்துறை ,சிந்தாமணி படித்துறை, ஸ்ரீரங்கம் கீதாபுரம் படித்துறை போன்ற படித்துறைகளிலும் புரோகிதர்களை வைத்து பூஜை செய்து பொது மக்கள் திதி கொடுக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com