ரஷிய இளம்பெண்ணிடம் மாஜிஸ்திரேட்டு 1 மணி நேரம் விசாரணை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட ரஷிய இளம்பெண் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
ரஷிய இளம்பெண்ணிடம் மாஜிஸ்திரேட்டு 1 மணி நேரம் விசாரணை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண் அலினா (வயது 22). கடந்த 16-ந் தேதி காலை அலங்கோலமான நிலையில் கிடந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் திருவண்ணாமலை மருத்துவமனையில் ஆரணி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமியிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை அபார்ட்மெண்ட் உரிமையாளர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், பாரதியின் அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகிய 3 பேர் மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷிய இளம்பெண் பூரண குணமடைந்தார். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் ரஷிய டாக்டர் முன்னிலையில் டாக்டர்கள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்தனர். தொடர்ந்து சட்டரீதியான விசாரணை உள்ளதால், அவர் சில நாட்கள் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் ரமணாஸ்ரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ரஷிய இளம்பெண்ணை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆரணி கோர்ட்டிற்கு விசாரணைக்கு ரஷிய இளம் பெண்ணை போலீசார் அழைத்து சென்றனர்.

ஆரணி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி முன்னிலையில் ரஷிய இளம்பெண் இரவு சுமார் 7.30 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். இதையடுத்து மீண்டும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com