

மயர்ஸ்க் லைன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான மயர்ஸ்க் ஹோனம் கடந்த 1-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு எகிப்தின் சுவேஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. இதில் 13 இந்தியர்கள் உள்பட 27 ஊழியர்கள் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு லட்சத்தீவுகளுக்கு உட்பட்ட அகட்டி தீவில் இருந்து 340 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, கப்பலில் உள்ள ஒரு கண்டெய்னரில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் ஊழியர்கள், இந்திய கடலோர காவல்படையின் மீட்பு மையத்திற்கு தகவல் அளித்துவிட்டு அனைவரும் கடலில் குதித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த வணிக கப்பல்கள் உஷார்படுத்தப்பட்டன. தீப்பிடித்த கப்பலில் இருப்பவர்களை மீட்கும்படி கடலோர காவல்படை தெரிவித்தது. இதையடுத்து ஒரு வணிக கப்பலில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கண்டெய்னர் கப்பல் முழுவதும் தீப்பிடித்து 25 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.