

பூந்தமல்லி:
மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ள சந்தைகளில் தடை செய்யப்பட்ட குட்கா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக
வந்த தகவலையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரவாயலில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் சாலையோரம் நின்ற லாரியில் இருந்து சில மர்ம
நபர்கள் மற்றொரு வாகனத்திற்கு பார்சல்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதைக்கண்ட போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, அவர்கள்
முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.
மேலும் இதனால் சந்தேதேகமடைந்த போலீசார் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது
தெரியவந்ததையடுத்து, அங்கிருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது பிடிபட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் (30), சென்னை ராயபுரத்தை சேர்ந்த சரவணன் (32) என்பதும், இவர்கள்
பெங்களூரூவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை பெரிய பார்சல்களாக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இரவு நேரங்களில் குட்கா தேவைப்படுவோருக்கு வாகனங்களை நிறுத்தி பண்டல்களை இறக்கி கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, குட்கா கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.