

சென்னை:
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளின் கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆகும்.
கடந்த அக்டோபர் 1-ந்தேதி நிலவரப்படி அரை டி.எம். சி.க்கும் குறைவாக 434 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது.
அதன்பிறகு பெய்த மழை காரணமாக கடந்த மாதம் 26-ந்தேதி 1028 மில்லியன் கன அடியாக உயர்ந்தது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பிறகு ஏரிகள் வேகமாக நிரம்பத் தொடங்கியது.
ஒரே வாரத்தில் 1086 மில்லியன் கன அடி நீர் வந்துள்ளது. இதனால் தற்போது நீர் இருப்பு 2114 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இங்கு தற்போது 11.05 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அதாவது 891 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 1716 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக 73 கன அடி திறந்து விடப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இங்கு 7 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. 882 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 1648 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக 84 கன அடி திறக்கப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி. இங்கு 7.76 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. நீர் இருப்பு 301 மில்லியன் கன அடி ஆகும். இங்கு 590 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இங்கு தற்போது 21.50 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. நீர் இருப்பு 400 மில்லியன் கன அடி ஆகும். நீர்வரத்து 381 கன அடி.
தற்போது பெய்து வரும் பலத்த மழையால் மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி ஆகும். இந்த ஏரியில் 21.6 அடி நீர் மட்டம் வந்தாலே நிரம்பியதாக கருதப்படும்.
தற்போது 21 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இதனால ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளதால் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஒன்றியத்தில் மொத்தம் 77 சிறிய ஏரிகள் உள்ளன. இதில் 6 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளில் பாதி அளவுக்கு தண்ணீர் உள்ளது. அச்சரப்பாக்கம் பகுதியில் 101 சிறிய ஏரிகள் உள்ளன. இதில் 15 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகள் பாதியளவு நிரம்பியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 47.50 அடி. இங்கு தற்போது 44.65 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.
ஏரிக்கு வினாடிக்கு 1925 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் பழவேற்காடு ஏரியும் நிரம்பியுள்ளது. இந்த தண்ணீர் 20 கிராமங்களுக்குள் புகுந்துள்ளது.
செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. நந்திவரம் ஏரியின் மொத்த உயரம் 13 அடி. இந்த ஏரி முழுவதும் நிரம்பி விட்டது. செங்கல்பட்டு கொளவாய் ஏரியின் மொத்த உயரம் 15 அடி. இங்கு தற்போது 14 அடி உயரத்துக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
ஊரப்பாக்கம் ஏரியில் 95 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. கிளாம்பாக்கம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, விஞ்சியம்பாக்கம் ஏரி, பொத்தேரி ஏரி, ஆத்தூர் ஏரி ஆகியவை முழுவதுமாக நிரம்பி விட்டன. திருத்தேரி ஏரியில் 80 சதவீதம் அளவுக்கும், பாலூர் ஏரியில் 50 சதவீதம் அளவுக்கும் தண்ணீர் உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 924 ஏரிகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 97 ஏரிகளில் பிள்ளைபாக்கம் ஏரி, மேவலூர் குப்பம் ஏரி, மாம்பாக்கம் ஏரி, பென்னலூர் ஏரி, அமரம்பேடு ஏரி உள்ளிட்ட 36 ஏரிகளில் முழுவதும் நீர் நிரம்பி உள் ளது. மீதமுள்ள ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வருகின்றன. ஏரிகளை உடையாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.