

மதுரை:
தமிழகத்தில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2வது தலைநகர் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மதுரையில் ஆகஸ்ட் 21ம் தேதி அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தாய்வில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் வர்த்தகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
2வது தலைநகரம் தொடர்பாக அரசு தரப்பிலோ, கட்சி தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்காத நிலையில், அமைச்சரின் இந்த முயற்சி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால், 2-ஆம் தலைநகர் என்பது அரசின் முடிவல்ல, என தர்மபுரியில் நேற்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தபோது கூறினார்.
இந்த பரபரப்பான சூழலில், திட்டமிட்டபடி மதுரையில் இன்று அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரையை 2-ஆம் தலைநகராக அறிவிக்க கோருவது தொடர்பாக தென் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இரண்டாம் தலைநகர் என்பது அரசின் முடிவல்ல என முதல்வர் கூறியிருக்கும் நிலையில், இன்று அமைச்சர் தலைமையில் கூடி ஆலோசனை நடத்துவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.