மதுரை அருகே பெண்களிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது

பெண்களிடம் நகை பறித்த மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே பெண்களிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது
Published on

பேரையூர்:

மதுரை பெத்தானியாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 40). இவர் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு முத்து, மனைவி முருகேஸ்வரியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 3 வாலிபர்கள், இருவரையும் சுற்றி வளைத்தனர். முருகேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.புளியம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த சதீஷ்ராஜா (23), ஐராவதநல்லூர் ஸ்டீபன் ராஜ் (18), சக்கிமங்கலம் அருண்பாண்டியன் (25) ஆகிய 3 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார், அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முருகேஸ்வரியிடம் நகை திருடியது தெரியவந்தது. மேலும் நடந்த விசாரணையில் 3 பேர் மீதும் மதுரை அண்ணாநகர், புதூர், கீரைத்துறை, தெப்பக்குளம், விளக்குத்தூண் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com