

மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி அருகே உள்ளது சவரப்பட்டி. இங்குள்ள மொட்டாம்பாறை அடிவாரத்தில் பெரியாறு பிரிவு பாசன கால்வாய் செல்கிறது.
இங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் (வயது51) என தெரியவந்தது. இவர் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 5-ந்தேதி ஒரு பெண் மற்றும் 2 வாலிபர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் குற்றாலம் செல்வதற்காக காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த காரைதான் நாகநாதன் ஓட்டி வந்துள்ளார்.
அவர் 9-ந்தேதி சென்னை திரும்புவதாக டிராவல்ஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவர் திரும்பாததால் சென்னை போலீசில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் புகார் கொடுத்தார்.
அதில் காருடன் சென்ற நாகநாதன் மாயமாகி உள்ளார். அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே கார் கடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தகவல் தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந் தது நாகநாதன் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அவர் ஓட்டி வந்த கார் மற்றும் அதில் வந்தவர்கள் மாயமாகி உள்ளனர். எனவே அவர்கள்தான் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை கடத்தி சென்று இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் குற்றாலத்தில் 3 பேரையும் இறக்கி விட்டு விட்டு வரும் வழியில் கார் கடத்தும் கும்பல் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை கடத்தி இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் நாகநாதன் ஓட்டி வந்தகாரில் ஜி.பி.எஸ். கருவி இருந்துள்ளது. அதன் மூலம் காரின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை. எனவே கார் கடத்தும் கும்பல் ஜி.பி.எஸ். கருவியை சேதப்படுத்தி விட்டு காரை கடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கார் கடத்தலில் தொழில் நுட்பம் தெரிந்த மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என கருதும் போலீசார் மேலூர்-திருச்சி சாலையில் உள்ள சிட்டம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.