கந்து வட்டி கொடுமை- கேபிள் டிவி ஆபரேட்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

மதுரையில் கந்து வட்டி கொடுமையால் மனவேதனை அடைந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமை- கேபிள் டிவி ஆபரேட்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
Published on

மதுரை:

மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி, கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரது மனைவி கலா.

சில மாதங்களுக்கு முன்பு தொழில் விருத்திக்காக செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, சாந்தி ஆகியோரிடம் ரவி கடன் வாங்கினார். அதற்கு உரிய வட்டியும் செலுத்தி வந்தார். அசல் தொகையை விட கூடுதலாக வட்டியை ரவி செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஈஸ்வரி, சாந்தி ஆகியோர் இன்னும் கூடுதலாக வட்டி கேட்டும், அசல் தொகை செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் பணத்தை உடனே செலுத்துமாறும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ரவி, போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஈஸ்வரி, சாந்தி ஆகியோர் மீண்டும் பணம் கேட்டு ரவி, அவரது மனைவியை வீட்டிற்கு சென்று அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com