பேச்சுவார்த்தை குழுவை எடப்பாடி அணியும் கலைக்க வேண்டும்: மதுரை எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

ஓ.பி.எஸ். அணியுடன் இணைப்பு என்பது சாத்தியமில்லாதது. எனவே எடப்பாடி அணியும் பேச்சுவார்த்தை குழுவை கலைத்துவிட வேண்டும் என்று மதுரை எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்.
ஏ.கே.போஸ் - ராஜன்செல்லப்பா
ஏ.கே.போஸ் - ராஜன்செல்லப்பா
Published on

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியிலும், எடப்பாடி அணியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு அமைக்கப்பட்டு 2 மாதங்கள் முடிந்த நிலையில் எந்த இணைப்பு பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை குழுவை கலைத்து விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி அணியில் உள்ள மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியதே நான் தான்.

ஏனென்றால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அ.தி.மு.க. அரசு மீதும், இயக்கத்தின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்த பேச்சுவார்த்தை குழு தடையாக இருந்தது. எனவே அந்த அதிகாரமில்லாத குழுவை கலைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன்.

இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனது அணி சார்பில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விட்ட தாக கூறி இருக்கிறார். இரு அணிகளும் இணைப்பு சாத்தியமில்லாதது. இணைய வேண்டிய அவசியமும் இல்லை.

எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவாக பேச்சுவார்த்தை குழுவை கலைத்து விட்டு மக்கள் நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கூறியதாவது:-

நேற்று வரை இரு அணிகளும் இணைவோம் என்று கூறி வந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது பேச்சுவார்த்தை குழுவை கலைத்து விட்டதாக கூறி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.

அவர்களது அணுகுமுறைகளை பார்க்கும்போது இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. பேச்சு வார்த்தைக்கு வரவேண்டிய அவர்களே வேண்டாம் என்று சொன்ன பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி தரப்பில் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை.

எனவே பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மக்கள் நலப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com