

மதுரை:
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்படுகின்றன.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதற்கு பதிலாக பல்வேறு பகுதியில் புதிய கடைகளை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசுக்கு சுமார் 30ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் முக்கியத்துறையாக டாஸ்மாக் உள்ளது.
டாஸ்மாக் கடைகள் தாக்கப்படுவதால் பொது மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, அரசுக்கு வருவாயும் குறைகிறது.
எனவே டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கடந்த மே 3-ந் தேதி தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.
எனவே, அந்த மனுவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.
பின்னர் டாஸ்மாக் போராட்டம் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக தலைமை செயலாளர், தமிழக காவல் துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.