

மதுரை:
மதுரையில் 5-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. வாகனங்கள் பாதிக்கும் மேல் ஓடாததால், தனியார் வாகனங்கள் வசூல் வேட்டையில் இறங்கி வருகின்றன. பணிக்கு திரும்ப தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு, எல்லிஸ் நகர், பழங்காநத்தம், கே. புதூர் உள்ளிட்ட 16 போக்குவரத்து பணிமனைகள் முன்பாக ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் மதுரை மாநகரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பஸ் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது.
இன்றும் அரசு பஸ்கள் சரியாக இயங்காததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே தமிழக போக்குவரத்து நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி, ‘ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் போக்குவரத்து ஸ்டிரைக் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதில் போக்குவரத்து ஊழியர் தரப்பு வாதம் முன்வைக்கப்படும். இதனை கோர்ட் ஏற்று உத்தரவு பிறப்பித்தால், ஸ்டிரைக் முடிவுக்கு வரும்.
இல்லையெனில் போக்குவரத்து ஊழியர் மீதான வழக்குப்பதிவு, பணிநீக்கம் உள்ளிட்ட அம்சங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.