வைகோவின் ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

சேத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
வைகோ
வைகோ
Published on

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். 

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.  வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவுக்கு அறிவுரை வழங்கிய நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆயிரம் விளக்கு காவல்துறை ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், தேசத்துரோக வழக்கில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சட்ட விரோதமானது என்றும், குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதாரம் மற்றும் சாட்சி இல்லாத நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com