சிலையில் தங்கம் மோசடி: தலைமை ஸ்தபதியை கைது செய்ய தடை- ஐகோர்ட்டு உத்தரவு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான உற்சவர் சிலையில் தங்கம் மோசடி தொடர்பான வழக்கில் தலைமை ஸ்தபதியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
சிலையில் தங்கம் மோசடி: தலைமை ஸ்தபதியை கைது செய்ய தடை- ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான உற்சவர் சிலையில் தங்கம் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் சில ஆவணங்களை ‘சீலிட்ட கவரில்’ தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் போலீசாரின் புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘நாளை (வியாழக்கிழமை) முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்பு மனுதாரர் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அந்த விசாரணையின் அடிப்படையில் வருகிற தகவல் அடிப்படையில், மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை மனுதாரரை போலீசார் கைது செய்ய கூடாது’ என்று உத்தரவிட்டார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com