10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Published on

சென்னை:

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார்.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்க கூடாது எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேசமயம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com