

மதுரை:
தூத்துக்குடி துறைமுக பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கப்பல் கடந்த 2013–ம் ஆண்டு அத்துமீறி நுழைந்தது. கப்பலில் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கப்பல் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் உள்பட 35 பேருக்கும் தூத்துக்குடி கோர்ட்டு 2016-ம் ஆண்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவர்களில், 23 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த உத்தரவை எதிர்த்து 35 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதே போன்று கீழ்கோர்ட்டு விதித்துள்ள தண்டனையை நிறுத்திவைத்து தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும் விடுவிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டிருந்தால் அது ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.