

குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் குளிர்வாட்டி வருகிறது. குளிரால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குவாலியர் மாவட்டத்தில் கடும் குளிர் வாட்டுகிறது.
குவாலியரில் கோலாகா மந்திர் மற்றும் லால் திபரா பகுதிகளில் உள்ள கோசாலைகளில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பசுக்கள் உள்ளன.
இங்குள்ள கோலாகா மந்திர் பகுதியில் அரசு நடத்தும் கோசாலையில் குளிர் தாங்காமல் 6 பசு மாடுகள் சமீபத்தில் இறந்தன.
இதை கண்டித்து கடந்த வாரம் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து குவாலியரில் மாநில அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் கோசாலைகளை மாவட்ட கலெக்டர் அனுராக் சவுத்ரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் அனுராக் சவுத்ரி கடந்த ஜூன் மாதம் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மரக்கன்று ஒன்றை நட்டு, அத்துடன் செல்பி எடுத்து விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
நேற்று கோசாலைகளில் ஆய்வை முடித்ததும் அவர் புதிதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தோர் கோசாலைகளில் குறைந்தபட்சம் 10 பசு மாடுகளுக்கு போர்வை வாங்கித் தரவேண்டும். அவ்வாறு போர்வை வழங்குபவர்களுக்கு உடனடியாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.