மாதவரம் அருகே ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகள் இடிப்பு

மாதவரம் அருகே ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகளை 3 ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாதவரம் அருகே ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகள் இடிப்பு
Published on

மாதவரம்:

மாதவரத்தை அடுத்த மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பாலசுப்பிரமணியம் நகரில் தொழில் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது.

இதனை சிலர் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்று உள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர்.

இந்த குடியிருப்புகளுக்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு, தெருவிளக்கு, குடிதண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற கடந்த மாதம் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.

அதன்படி மாதவரம் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் வினோத், கார்த்திக் ஆகியோர் வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 3 ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதையொட்டி மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் கலைச்செல்வன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com