பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் நடத்திய கூட்டம் தோல்வி

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்திய கூட்டம் தோல்வியில் முடிந்தது. #Parliament #PNBScam #BudgetSession2018
பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் நடத்திய கூட்டம் தோல்வி
Published on

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்திய கூட்டம் தோல்வியில் முடிந்தது. #Parliament #PNBScam #BudgetSession2018

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கி உள்ளன.

குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்களும், பி.என்.பி. மோசடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. உறுப்பினர்கள் பல்வேறு  பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக மக்களவை முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளுடன், சிலைகள் உடைப்பு விவகாரமும் இன்று எதிரொலித்தது. தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது மற்றும் எச்.ராஜாவின் கருத்து தொடர்பாக விவாதிப்பதற்காக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.


உறுப்பினர்களின் அமளி காரணமாக அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் கூச்சலும், அமளியும் நீடித்ததால் மாநிலங்களவையும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்களை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதற்கு சம்மதிக்காத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

இவ்விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தயாராக இருப்பதால் இதற்கென தனியாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com